Categories
தேசிய செய்திகள்

“என் மகனின் ஆடைகளை அவிழ்த்து சோதனை”…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கேரளத்திலுள்ள திருவனந்தபுரம் விமானம் நிலையத்தில் தன் மகனின் ஆடைகளை அவிழ்த்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் வஹாப் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளரிடம் கூறியிருப்பதாவது, சென்ற நவ.1ம் தேதி இரவு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷாா்ஜா நகரிலிருந்து திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு என் மகன் வந்தாா். இந்நிலையில் என் மகன் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவரின் ஆடைகளை அவிழ்க்க வைத்து, பிறகு எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். இது போன்ற சோதனையை மாஜிஸ்திரேட் ஒப்புதலுடன்தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த சோதனையை சுங்கத்துறை அதிகாரிகள் தாமாக முடிவெடுத்து மேற்கொண்டு இருக்கின்றனர். இது ஒருவருக்குள்ள தனிப்பட்ட உரிமையை மீறுவது ஆகும். புகாா் (அ) சந்தேகத்தின்படி, ஒருவரை தடுத்து விசாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஆடைகளை அவிழ்த்து எக்ஸ்ரே பரிசோதனை செய்வது என்பது அத்துமீறும் நடவடிக்கை ஆகும். இது பற்றி மத்திய நிதியமைச்சரிடம் புகாரளித்துள்ளேன்.

இத்தகவலை கேரளத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்துல் வஹாப் ஏற்கெனவே தெரிவித்தாா். அதன்பின் இவ்விவகாரம் பொதுவெளிக்கு வந்தது. இது தொடர்பாக சுங்கத் துறை அதிகாரி ஒருவா் செய்தியாளரிடம் கூறியதாவது, விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில பேர் உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்துகின்றனா். இச்சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை சுங்கத்துறை தீவிரப்படுத்தி இருக்கிறது. அப்துல் வஹாபின் மகனிடம் சோதனையிடப்பட்ட சம்பவம், அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்தனா் என்று அவர் தெரிவித்தாா்..

Categories

Tech |