மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாண்டி அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாண்டி அந்த மாணவியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் அந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.