பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை திருடிய குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் நீலா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் பேக்கரி கடைக்கு ஒரு மர்ம நபர் கேக் ஆர்டர் செய்வது போல வந்து நீலாவிடம் பேசியுள்ளார். இதனையடுத்து நீங்கள் அணிந்திருக்கும் தங்க சங்கிலியின் மாடல் அழகாக இருக்கிறது. இது போல எனது மனைவிக்கும் வாங்கி தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என அந்த நபர் நீலாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் புகைப்படம் எடுப்பதற்காக நீலாவின் சங்கிலியை அந்த நபர் கேட்டுள்ளார். இதனால் நீலா தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கழற்றி மேசை மீது வைத்துள்ளார்.
அப்போது அந்த மர்ம நபர் சங்கிலியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து நீலா திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுனரான துரை என்பவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த துரை சங்கிலியை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.