விவசாய மக்களின் பெண் குழந்தைகளின் கல்விச் செலவிற்கு தனது மாநிலங்களவை ஊழியத்தை செலவழிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம்ஆத்மி மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன்சிங் மாநிலங்களவை உறுப்பினரான தனது ஊதியத்தை விவசாயிகளுடைய மகளின் கல்வி மற்றும் நலத் திட்டங்களுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு மேம்படுவதற்கான நலத்திட்டங்களை கொடுக்க உள்ளதாக கூறினார். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் ஆகும் நிலையில் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை காலையில் ஆம்ஆத்மி அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.