பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் வெளியானது. இதையடுத்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை மீரா மிதுன், தன் மீது தவறு இல்லை எனவும், தன்னை பழி வாங்கும் நோக்கில் போலீசார் கைது செய்ததாகவும் மாஜிஸ்திரேட் முன்பு தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர், தனக்கு சாப்பாடு கூட தரவில்லை என்றும் போலீசார் அடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.