“அரசியலுக்கு வந்து என் வாழ்க்கையை அழிச்சிகிட்டேன்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எங்கள் ஊரில் அமைதியாக தேர்தல் நடக்கிறது. இப்போதுமே இப்படி தான். எங்கள் கிராமமே ஒன்றாக இருக்கிறது. இந்த தடவை என்ன மகிழ்ச்சி என்றால் ? யார் யார் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனா எங்க ஊரு ஒன்றாக இருக்கின்றது. ஒற்றுமையாக இருக்கின்றது. எந்த காலத்திலும் இல்லாத ஒரு ஒற்றுமையை என் மகன் துரை வையாபுரி ஏற்படுத்தி வைத்துள்ளார்.
எங்க ஒன்றியத்துல ஜெயிக்கும்னு நினைக்கிறேன்.மத்த ஒன்றியங்களில் எண்ணிப் பார்த்த பிறகு தான் சொல்ல முடியும். தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும். திமுக தான் ஜெயிக்கும். என் மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனக்கு என் மகன் அரசியலுக்கு வருவது விருப்பம் இல்லை.
காரணம் நான் 28 வருடம் கஷ்டப்பட்டு உள்ளேன். 56 வருடம் கஷ்டப்பட்டு உள்ளேன். 28 வருடம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் காரில் பிரயாணம் செய்தேன், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணம் செய்தேன், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் செய்தேன். அஞ்சர வருடம் ஜெயிலில் இருந்தேன்.
வாழ்க்கையே நான் ஓரளவு அழிச்சுகிட்டேன். என்னோடு போகட்டும், என் மகனும் அந்த கஷ்டப்பட வேண்டாம் என்பதால் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்பது 20ஆம் தேதி தான் தெரியும். 20ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் கூட உள்ளது. அதில் பெரும்பான்மை என்ன முடிவுக்கு வருவார்கள் என்று அன்றைக்கு தான் தெரியும் என வைகோ தெரிவித்தார்.