விவசாயியின் விரலை கடித்து காயப்படுத்திய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாளையம் கோவில்பட்டி பகுதியில் சமையல் தொழிலாளியான வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான காளிமுத்து என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த வடிவேல் காளிமுத்துவின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்துள்ளார். இதனால் காயம் அடைந்த காளிமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வடிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.