சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் புகைப்படத்துடன் உருக்கமான பதிவை இயக்குனர் மிஸ்கின் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் சிறுவயதில் என் தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி திரையரங்கில் ப்ரூஸ்லீ நடித்த ‘என்டர் தி டிராகன் ‘ திரைப்படத்தை பார்த்தேன். சிறுவனாக இருக்கும் போது அந்தத் தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இந்நிலையில் தற்போது என்னுடைய அடுத்த படத்தின் லொக்கேஷனுக்காக திண்டுக்கல் சென்றபோது அந்தத் தியேட்டரை பார்க்க சென்றிருந்தேன்.
தியேட்டரின் உரிமையாளர் இங்கு படம் எதும் ஓடவில்லை என கூறினார் . அதற்கு ‘என் வாழ்க்கையை ஓடவைத்த தியேட்டர்’ என்றேன். ஐந்து வயது சிறுவனாக தியேட்டருக்குள் நுழைந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணார்ந்து பார்த்தேன். நான் சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன. ஏன் தியேட்டரில் படம் ஓடவில்லை என கேட்டேன். அதற்கு டிவி, பைரஸி , நெட் வந்ததால் படம் ஓட்டுறத நிப்பாட்டிட்டோம் இதையடுத்து அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்கப்போகிறோம் என்றார். நெஞ்சில் வலியுடன் காரில் ஏறி வந்துவிட்டேன். ‘அந்த தியேட்டரின் வாசலில் அண்ணார்ந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.