என்னுடைய வீட்டில் சோதனை செய்தபோது பணமோ ஆவணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களான எம்எஸ் பாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வந்தனர். இதையடுத்து அதிமுக கட்சியில் அடுத்ததாக யார் சிக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கர் அவர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் பொது ஊழியராக பணியாற்றியது முதல் ஏப்ரல் மாதம் 2021 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் தனது பெயரிலும், தனது குடும்பத்தாரின் பெயர்களிலும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை ரூ.27,22,56,736 கோடி அளவில் சொத்துக்களை சேர்த்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை முடிவில் 4.7 கிலோ தங்கமும், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழும், 23 லட்சத்து 83 ஆயிரத்து 700 ரொக்கமும், ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது: “என் வீட்டில் சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்கு சோதனைகள் என்பது வழக்கமாக நடைபெறுவது தான்.
அதுவும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து வரத்தான் செய்யும். நான் ஒரு கடின உழைப்பாளி, இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு குடிமகனாக அவர்களின் விசாரணைக்கு நான் ஒத்துழைத்து உள்ளேன். இந்த வழக்கை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். என் இல்லத்தில் எந்த ஆவணங்களும் பணமும் கைப்பற்றப்படவில்லை. ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிடுவது வருத்தமளிக்கும் வகையிலும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று உள்ளது. தவறான தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
சோதனை முழுவதும் நிறைவடைந்த பிறகு நாளை செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சோதனையின்போது தன்னுடன் உறுதுணையாக இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். தனது மகளுக்கு கொரோனா இருந்த போதிலும் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி காவல்துறையினர் தனது வீட்டில் சோதனை நடத்தி இருப்பது வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.