ஸ்கூட்டரை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பிடாரி கீழவீதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருமாள் கோவில் வாசலில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கு அவரது ஸ்கூட்டர் இல்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதில் சீர்காழி பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் தீபன் என்பவர் சுப்ரமணியனின் ஸ்கூட்டரை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீபனை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்து சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.