காலாவதியான அனுமதிசீட்டை வைத்து கற்களை கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் சோதனை சாவடியில் குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு கேரளாவை நோக்கி சென்ற 3 டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் லாரியில் இருந்தது கேரள மாநிலம் ராஜாக்காட்டை சேர்ந்த வைஷ்ணவ், மார்டின்பீட்டர், பாபு என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் காலாவதியான அனுமதிசீட்டு இருந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் இதர ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருக்கும்போது லாரி டிரைவர் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் லாரி மற்றும் கற்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.