நுதனமாக பேசி 56 பேரிடம் இருந்து 7 3/4 கோடி ரூபாயை மோசடி செய்த 13 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில் சிவக்குமார் (41) மற்றும் புலிக்குட்டி ராஜா (50) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருச்சியை சேர்ந்த ராஜப்பா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது ராஜப்பா தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் முதலீடு செய்தால் மூன்று மடங்கு லாபம் மற்றும் நிலங்கள் வீட்டு மனைகள் போன்றவை கிடைக்கும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய சிவகுமார் மற்றும் புலிக்குட்டி ராஜா தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என 56 பேரை சேர்த்து திருச்சியில் அவர் கூறிய நிறுவனத்தில் மொத்தம் 7 கோடியே 93 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளனர். இதனையடுத்து ராஜப்பா அவர்களை திருச்சி பாடலூர் மற்றும் உளுந்தூர் பேட்டை ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று நிலங்களை பத்திரப்பதிவு செய்து தருவதாக நம்பிக்கை அளித்துள்ளார். இதன்பின் வெகு நாட்கள் ஆகியும் ராஜப்பா நிலத்தை பத்திரபதிவு செய்யாமலும், முதலீடு செய்த பணத்திற்கான கமிஷன் தொகை தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனையறிந்த சிவகுமார் மற்றும் புலிக்குட்டி ராஜா ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் மேற்கண்ட தனியார் நிறுவனத்தின் பங்குதாரரான பால்ராஜ், பாபு, அறிவுமணி, ஏஜெண்டுகள் ஜெயஸ்ரீ, சாகுல்ஹமீது, இளங்கோவன், மணிகண்டன், பிரகாஷ், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் பிரபாகரன், பொன் முருகேசன், மேலாளர்கள் ஆனந்த் பத்மநாபன், பஷீர் அகமது ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.