ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தியும், உலக நாடுகள் முயன்று கொண்டிருக்கிறது. இருப்பினும், முன்பிருந்த சூழல் போல் புதிய இயல்பு நிலை இருக்கப் போவதில்லை. போக்குவரத்து, பள்ளிகள், வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றார்போல் பாதுகாப்பான சூழலை உருவாக்க உலக நாடுகள் தொடர்ந்து முயன்றுவருகின்றது.
மற்றொரு முனையில், அரசுகள் விதிக்கும் விதியை மக்கள் பின்பற்றியாக வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, ஜப்பானில் உள்ள தீம் பார்க்குகள் உள்ளன. கரோனாவைத் தடுக்கும் விதமாக, பிப்ரவரி மாதம் மூடப்பட்ட தீம் பார்க்குகள் ஜூலை மாதம் திறக்கப்பட்டன. இதற்காக, புதிய வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுந்த இடைவெளி, சானிடைசரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்துதல் என பல முறைகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறிவிப்புகளாக மட்டுமல்லாமல் அவை செயல்முறையாகவும் மாற்றப்படவுள்ளன. பாட்டு பாடுவதற்கு கூட கரோனாவைப் பரப்பும் முயற்சியாக அங்குப் பார்க்கப்படுகிறது. மக்களின் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதில் தான் கரோனாவுக்கு எதிரான போரில் எப்படி வெற்றி அடையப்போகிறோம் என்பது அடங்கியுள்ளது. புதிய இயல்பு நிலை மிகக்கடினமாக இருக்கப்போகிறது. இதயத்திற்குள் அலறல் சத்தம் கேட்கவுள்ளது.