ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முகமது பாஷா ,சித்தூர் 2- டவுன் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதேபோல் சித்தூரை சேர்ந்த இம்தியாஸ் ஆயுதப் படையில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவில் ரோந்து பணிக்கு செல்லும்போது, அங்குள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் திருட்டு போனது. இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் சித்தூர் 2- டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, ஜவுளிக் கடையில் உள்ள சிசிடி கேமராவின் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது அதில் இன்ஸ்பெக்டரான முகமது பாஷா மற்றும் இம்தியாஸ் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுமட்டுமல்லாமல் எஸ்பி செந்தில்குமார் இவர்கள் இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இதனால் மிகவும் மனவேதனை அடைந்த முகமது பாஷா, திடீரென உடல்நலக்குறைவானார் . இவரை சிறைத்துறை அதிகாரிகள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முகமது பாட்ஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து காவல்துறையினர் முகமது பாஷா சிறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை உடல்நலக்குறைவால் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். முகமது பாஷாவின் மர்மமான உயிரிழப்பு மற்ற காவலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மர்ம மரணத்தை குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.