நிலம் மோசடி செய்த 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு பூங்கா அமைப்பதற்காக 12,877 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2,348 சதுர அடி நிலம் அப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகமும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் தேனி மாவட்ட குற்றப்பிரிவில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பால்பாண்டி, ஊராட்சி செயலாளர் குமரேசன் உள்ளிட்ட 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி ஜிடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி வழக்கில் தொடர்புடைய பைசுதீன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் பழனியம்மாள், குமரேசன் ஆகியோருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.