நாம் தமிழரின் தமிழ் தேசியம் எப்போதும் வெற்றிபெற்றது என கொளத்தூர் மணி விமர்சனம் செய்த்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, தமிழ் தேசியம் என்பது போன காலத்து பழங்கஞ்சிதான், அது மாபொசி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆதித்தனாரால் தொடரப்பட்டது. இரண்டு பேரும் உதயசூரிய சின்னத்தில் நின்றுதான் அவர்கள் பதவி பெற்றார்கள். இவர்கள் வழியாகத்தான் அவர்கள் அவைத் தலைவர் பதவியும், மேலவைத் தலைவர் பதவியும் பெற்று அனுபவித்து விட்டு ஆட்சி முடிந்தவுடன் திரும்பி காங்கிரஸ் கட்சிக்கு போய்விட்டார். மா.பொ.சி, ஆதித்தனார் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். அதற்கப்புறம் குணா வந்தார், இப்போது அதை தூக்கி கொண்டு மீண்டும் இப்போது புதிய தலைவர்களாக சீமான் போன்ற அரசியல் குழந்தைகளும், அரசியல் அனுபவம் மிக்க மணியரசன் போன்றவர்கள் சூழ்ச்சிகரமாகவும் இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அது எப்படி கடந்த காலங்களில் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள் எடுத்தவர்கள் தோற்றுப் போனார்களோ, அதை போல இவர்களும் அதில் வெற்றிபெற முடியாது. ஒரு மக்களுக்கான அரசியலை, மக்கள் நலனுக்கான உரிமைகளுக்கான அரசியலை விட்டுவிட்டு சொற்சிலம்பம் ஆடி கொண்டிருப்பது, ஒரு சொல்லை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது எப்பொழுதும் வெற்றி பெறாது. வேறு எதுவும் இல்லை பாவம் இதை எடுத்திருக்கிறார்கள்.
நடந்து கொண்டிருக்கின்ற பல செயல் திட்டங்கள் தமிழ்வழி கல்வியில் பயின்றோருக்கு முன்னுரிமை, அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்கிற முடிவு, அதனுடைய பணியமர்த்தல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதை நாங்கள் பாராட்டுகிறோம். அதேவேளையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு இப்போது முதல்வர் அவர்கள் கடிதம் எழுதி ஆதரவு கேட்டதை போல அதன் தொடர்ச்சியாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு நீட் தேர்வை ஒழிப்பதற்கான முன் முயற்சியை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
பல்வேறு மாநிலங்களில் அதற்கான எதிர்ப்பு தொடங்கி இருக்கிறது. அதன் வழிகாட்டியாக சமூகநீதியின் வழிகாட்டியாக இருந்திருக்கிற தமிழ்நாடு தான் அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதால் அந்த வேண்டுகோளை நாங்கள் முன்வைக்கிறோம். தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு சாதி மறுப்பு திருமணங்களை காரணம் காட்டி ஆணவ படுகொலைகள் நடந்த வண்ணம் இருக்கிறது. இப்போது தான் 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு ஆணவப்படுகொலைக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது, வரவேற்க வேண்டிய தீர்ப்பு தான். அப்படிப்பட்ட குற்ற செயல்களுக்கு துணை நிற்கின்றன காவல்துறை அதிகாரிகளுக்கும் தண்டனை கொடுப்பது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும்.
ஆனாலும் இப்படிப்பட்ட ஆணவ கொலைகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுவதற்காக 2009 ஆம் ஆண்டிலேயே அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அப்படி ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறோம் என்று அறிவித்தார்.தேசிய சட்ட ஆணையத்திற்கு தங்களுடைய வேண்டுகோளை முன்வைத்ததன் காரணமாக அவர்கள் சட்டத்தை வடிவமைத்து 2011 – 12 இல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பொதுபட்டியலில் ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை காரணமாக சொல்லி பல மாநிலங்கள் கருத்து சொல்லவில்லை என்று அதை சட்டம் இயற்றாமலே தள்ளிக் கொண்டே போகிறார்கள். ஆனால் இந்த அரசுதான் ஒத்திசைவு பட்டியல் இருக்கின்ற கல்விக்காக தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுகிறார்கள்.
நீட் தேர்வை கொண்டுவருகிறார்கள் அதுவும் பொது பட்டியலில்தான் இருக்கிறது. ஆனால் இதற்கு மட்டும் சொத்தை காரணங்களை சொல்லி தள்ளிக் கொண்டே போகிறார்கள். இந்த காலகட்டத்தில் பல சமூக நீதி முன்னெடுப்புகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்ற தமிழ்நாடு, மாநில அளவிலாவது தமிழ்நாடு அரசு ஆணவபடுகொலை தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும், ஜாதி மறுப்பு இணையர்களுடைய குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீட்டை ஜாதி மறுத்தோர், ஜாதியற்றோர் என்ற பெயரில் அவர்களுக்கான தனி ஒதுக்கீட்டையும் கொடுப்பதன் வழியாக அப்படிப்பட்ட ஜாதி கடந்த திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.