முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், சில மாதங்கள் அமைதியாக இருந்தார். இதன் பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவ்வப்பொழுது ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அதிமுகவை மீண்டும் வழிநடத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும், இதையொட்டி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் கொரோனா பரவலும் தமிழக அரசின் கட்டுப்பாடுகளும் இவ்வளவு நாட்களாக சசிகலாவை கட்டிப்போட்டு இருந்தது. எனவே சரியான நேரத்திற்காக எதிர்ப்பாத்திருந்த சசிகலா இன்று தனது அதிரடி செயலை தொடங்கியுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அந்த நேரத்தில் சசிகலா சிந்திய கண்ணீர் அவரது ஆதரவாளர்களை பெரிதும் பாதிப்படைய செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஜெயலலிதா நினைவிடத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக என் மனதில் சுமந்து இருந்த பாரத்தை இங்கு இறக்கி வைத்துள்ளேன் இருக்கிறேன்.
தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்கள் நமது எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஆவர். ஆகவே இவர்கள் இருவரும் தொண்டர்களையும், கழகத்தையும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய, “சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம். சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை. இந்நிலையில் அவர் யானை பலம் கொண்ட கட்சியான அதிமுகவை ஒரு சிறிய கொசுவான சசிகலா தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல கூறுவது மிகப் பெரிய நகைச்சுவை ஆகும்.
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் சென்று வருகின்றனர். இவர்களில் ஒருவராகத்தான் சசிகலாவும் பார்க்கப்படுகிறார். மேலும் இவரது செயல்பாடுகள் எதுவும் தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. இந்நிலையில் அதிமுகவின் பொன்விழா வருகின்ற 17ஆம் தேதி நடைபெறுகிறது. இது கூட தெரியாமல் அவர் அங்கு சென்று இருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. மேலும் சசிகலாவிற்கு அதிமுக கொடியை உபயோகிப்பதற்கு எவ்வித அதிகாரமும் உரிமையும் கிடையாது” என்று கூறியுள்ளார்.