வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை அடுத்த ஆப்பக்கூடல் என்னும் ஊரில் கனரா வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியில் மேலாளராக பணி புரியும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது மேலாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளரை அனுமதித்து சிகிச்சை அளித்துவருகின்றனர். மேலும் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வங்கியில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முறையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே வங்கியானது திறக்கபடும் என அறிவிக்கப்ட்டுள்ளது.