அதிமுகவின் தற்காலிக புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் என்னென்ன பொறுப்பில் பதவி வகித்தார் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயலாற்றிய மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன். 1950களில் எம்ஜிஆர் மன்றத்தை தொடங்கி அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் கீழ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர். 1972-ல் திராவிட முன்னேற்ற கட்சியில் இருந்து எம்ஜிஆரை வெளியேற்றிய போது தான் வேலை பார்த்து வந்த பேருந்து ஓட்டுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து எம்ஜிஆருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.
1973ஆம் ஆண்டு கட்சியில் இவருக்கும் மற்றொரு நிர்வாகிக்கும் பிரச்சினை ஏற்பட்ட போது தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அன்று மாலை எம்ஜிஆர் அவர்கள் இந்த தகவலை தெரிந்து உடனே கட்சியினுடைய அதிகாரப்பூர்வ பத்திரிகையிலிருந்து தம்பி தமிழ்மகனின் சேவையை நான் இழக்க மாட்டேன் என்று கூறி மிகப் பெரிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அந்த அளவிற்கு எம்ஜிஆருடன் மிக நெருங்கிய நண்பனாக இருந்தவர்.
தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருந்து வந்த அவர் பேருந்து வாரிய தலைவராக, அண்ணா திராவிடத்தின் ஆட்சி மன்ற உறுப்பினராக பல பதவிகளை வகித்தார். இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைத்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. மிகத் தீவிரமான எம்ஜிஆர் பக்தராக, தீவிர தொண்டனாக அவர் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிச்சயமாக வருகிற பொதுக்குழுவில் அங்கீகாரம் கிடைத்த நிரந்தர அவைத்தலைவராக வருவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளது.