மாணவர்களை வயிற்று பசியுடன் இருக்கும்போது அறிவு பசியை வளர்த்துக் கொள்ள அவர்களை அறிவுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த காமராஜர் தமது ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்கள் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். காமராஜர் கொண்டு வந்த மதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் மெருகேற்றினார். பள்ளி மாணவர்களின் பசியாற்ற காமராஜர், எம்ஜிஆர் செயல்படுத்தி வந்த சிறப்பான திட்டத்தை தன் பங்குக்கு முட்டை மற்றும் வாழைப்பழத்தையும் சேர்த்து புண்ணியம் தேடிக்கொண்டார் கருணாநிதி. இப்படி தமிழகத்தை ஆண்ட ஆளுமைகள் ஆளுக்கு ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கும்போது கலைஞர் ஆட்சி நடத்துவதாக கூறும் ஸ்டாலின் தற்போது ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதுவும் அண்ணாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் திமுக அரசின் சார்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி மதுரைக்கு கீழ் அண்ணா தோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார். அத்துடன் மாணவர்களுக்கு தனது கையாலே உணவு பரிமாறியதுடன் அவருடன் சரிசமமாக தரையில் அமர்ந்து உணவை ருசித்து அவர்களை மகிழ்வித்தார். ஸ்டாலின் இந்த செயல் சத்துணவு திட்டத்தை தொடங்கியதை போல எம்ஜிஆர் பின்பற்றிய ஸ்டைலை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது 1982 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ள பிலோமினாள் பள்ளியில் தான் சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் அவரே பள்ளி மாணவர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறியதுடன், அவர்களுக்கு சரிசமமாக அமர்ந்து உணவு அருந்தியும் மகிழ்வித்தார். தற்போது ஸ்டாலினும் இந்த விஷயத்தில் எம்ஜிஆர் ஸ்டைலை பாலோவ் செய்துள்ளதாக பெருமை பொங்க அதிமுகவினர் கூறுகின்றனர்.