எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தாமதத்துக்கு மத்தியப் பல்கலைக்கழகம் ஆளுநர் தமிழிசையிடம் விளக்கம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (பிம்ஸ்), மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசையை அண்மையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.
அப்போது, ”2021 மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தாங்கள் எழுதிய எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதனால் பயிற்சி மருத்துவர்களாகச் சேர முடியவில்லை; முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 2022 நீட் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும்; ஆகவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் தாமதமின்றி வெளியிடத் துணைநிலை ஆளுநர் ஆவன செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து இந்து தமிழ் இணையதளத்திலும் அண்மையில் செய்தி வெளியானது. இந்நிலையில் துணைநிலை ஆளுநரின் உடனடித் தலையீட்டைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் இறுதியாண்டு, முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளைப் புதுச்சேரி பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆளுநரிடம் பல்கலைக்கழகம் விளக்கம் தெரிவித்துள்ளது என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.