திருப்பத்தூர் செவ்வாத்தூர் புதூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் எனக்கூறி 4.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் எம்.எஸ்.டபிள்யூ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி சென்றுள்ளார். அந்த சமயத்தில் தோழியின் மூலமாக அறிமுகமானவர் ராஜேஷ். ராஜேஷ் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்புள்ளது என்று ஆசை காட்டியுள்ளார். இதற்கு பணம் கொடுத்தால் கட்டாயம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தேன்மொழியும் கடந்த 2018-ம் ஆண்டு சுமார் 4.50 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார். வேலை இப்போது கிடைத்து விடும், அப்போது கிடைத்துவிடும் என்று ராஜேஷ் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 பேரை வேலைக்கு சேர்த்துவிட்டால் உனக்கு வேலையும் கிடைக்கும். அதற்கான கமிஷனும் கிடைக்கும் என்று அந்தப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். ராஜேஷின் பேச்சை நம்பிய தேன்மொழி, பலரிடம் அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்று ராஜேஷிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அரசு வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் தேன்மொழியை தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து தேன்மொழி ராஜேஷிடம் வேலை குறித்து கேட்டுள்ளார். எப்போது கேட்டாலும் இப்போது தருகிறேன், அப்போது தருகிறேன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டே இருந்திருக்கிறார். இதனால் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய தேன்மொழியை, உறவினர்கள் மீட்டுள்ளனர். இதையடுத்து ராஜேஷ் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக ராஜேசை அழைத்த ஒரு காவலரருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து அவருக்கு ராஜேஷ் பணத்தை கொடுத்து சரி கட்டியுள்ளார். இதனால் தேன்மொழி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ராஜேஷ் தேன்மொழியை செல்போனின் கண்டபடி மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். பின்னர் ராஜேஷ் மிரட்டிய ஆடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ஆடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும் ராஜேஷுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என திருப்பத்தூர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.