மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,
“கடந்த 1984ம் ஆண்டிலிருந்தே ஜெயலலிதா அவர்களுக்கு நான் ஒரு நல்ல தோழியாக இருந்தேன். புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த அடுத்த நாளிலிருந்து நான் ஜெயலலிதா அவர்களுடன் போயஸ் கார்டனில் தான் வசித்து வந்தேன். தற்போது வரை அதுவே என்னுடைய நிரந்தர முகவரியும் ஆகும். குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரியாகவும், தோழியாகவும் இருந்த அக்கா ஜெயலலிதா உடன் நான் வாழ்ந்து வந்தேன். அதுமட்டுமின்றி எனக்கு அக்கா ஜெயலலிதாவின் மீது அதிக அன்பும், பாசமும் இருந்தது.
இதற்கிடையில் தமிழக மக்கள் மீது உள்ள அளவு கடந்த அன்பினால் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத போதும் அவர்களின் நலனுக்காக கடுமையாக என் அக்கா ஜெயலலிதா போராடினார். தமிழக நலனுக்காகவும், பலதரப்பட்ட உரிமைகளுக்காகவும் ஜெயலலிதா சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.