கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட சாண்டி – பிரின்ஸியின் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் பென்சன் மற்றும் பென்சி. இந்நிலையில் பிறக்கும்போதே பெற்றோரின் தொற்றுடன் பிறந்த சிறுவர், சிறுமி இருவருக்கும் அட்மிஷன் கொடுக்க எந்த பள்ளியும் முன்வாராத நிலையில், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, செயல்பட்ட பள்ளிகளை எதிர்த்து பென்சனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த விஷயம் தேசிய ஊடகங்களில் வெளியானதால் பென்சனுக்கும், பென்சிக்கும் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், பென்சனின் தந்தை சாண்டி 1997 லும், தாய் பிரின்சி 2000-ஆம் ஆண்டிலும் இறந்து விட்டனர். இதனையடுத்து பென்சனும், பென்சியும் தாத்தா பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்த சிறுமி பென்சி 15 வயதில் மூளையழற்சி என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அதனை தொடர்ந்து சில வருடங்களில் தாத்தா, பாட்டியும் இறந்து விட்டனர்.
இந்நிலையில் தாய், தந்தை, தங்கை, தாத்தா பாட்டி என அனைத்து உறவுகளையும் இழந்த பென்சன் தனது உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், 25 வயதான பென்சன் கொல்லத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்போது சில காரணங்களால், அந்த காதல் முறிந்துள்ளது. இந்நிலையில் சோகத்தில் இருந்து வந்த பென்சன் சில நாட்களுக்கு முன் முகநூலில், ”என் திறமைக்காக என்னை நேசிப்பவரை விட என் குறைகளுக்காக என்னை நேசிப்பவரைத் தான் நான் விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்,பென்சன் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பென்சனின் உறவினரிடம் விசாரித்ததில், பென்சன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். போலீசார் நடத்திய மேற்படி விசாரணையிலும் இதே காரணம்தான் என உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் பிறக்கும் போதே எய்ட்ஸ் தொற்றுடன் பிறந்து 25 வயது வரை போராடி படித்து வளர்ந்த இளைஞர் காதல் தோல்வியால் இறந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது. மேலும், கடந்த 2003-ஆம் ஆண்டு கொல்லம் பகுதிக்கு வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பென்சன் மற்றும் பென்சி இருவரையும் சந்தித்து கட்டி மகிழ்ந்தது, பத்திரிகைகளில் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.