ஜேர்மன் அதிபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 6 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு செல்கின்றனர். மேலும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ரஷியா வேறு நாடுகளுக்கு செய்யப்படும் எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஜேர்மனியிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிபர் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கடந்த வாரம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு சென்று எரிசக்தி ஆதாரங்களுக்கான வேட்டையில் ஈடுபட்டார். இதனையடுத்து ஜெர்மனிக்கு எரிவாயு மற்றும் டீசல் வழங்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டது.
அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் ஜெர்மனி திரும்பிய சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். வளைகுடா சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய பிறகு லேசான அறிகுறிகள் இருந்துள்ளது. அதன்பின்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் அது உறுதியானதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் மாளிகையில் உள்ள தனது குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் ஆன்லைனில் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.