யூரோவை நாணயமாக பயன்படுத்தக்கூடிய 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இம்மாதம் 7.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரி சக்திகளின் விலையானது 38 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையில் ஐரோப்பா பணவீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்து இருக்கிறது. கடந்த 1981-க்கு அமெரிக்காவின் பணவீக்கம் சென்ற மாதம் 8.5 சதவீதமாகஅ திகரித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான போர் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு தடங்களாக இருக்கிறது. இதன் காரணமாக கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும் நாடுகளுக்கு ரஷ்யா-உக்ரைன் போர் மீண்டுமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பண வீக்கத்தால் மூலப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களில் விலை அதிகரித்துள்ளது. இதனிடையில் ஜெர்மனிநாடு மின்சார ஆற்றலை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்து வருகிறது.
ஜெர்மனியில் ஐ.ஜி மெட்டல் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 8.2 % அதிகரிப்பதற்கு வலியுறுத்தி இருக்கிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளானது எரிப்பொருள் இறக்குமதிக்கு ரஷ்யாவையே நம்பி இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு எதிரான தாக்குதலில் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிகரிக்கும் வெப்பம், மின்சார பயன்பாடு மற்றும் ஆட்டோமொபைல் எரிப்பொருள் விலைஉயர்வு போன்றவை ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வதை நிறுத்த முடியாமல் செய்கிறது. இப்பணவீக்கத்தின் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.