Categories
உலக செய்திகள்

எரிவாயு வழங்குகின்றோம்…. ஒரே ஒரு நிபந்தனை…. பிரபல நாடுகளுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்….!!

எரிவாயு வழங்களை ரஷ்யா மொத்தமாக முடக்கியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிபந்தனையுடன் உதவ முன்வந்துள்ளது உக்ரைன்.

ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை பராமரிப்பு காரணங்களை குறிப்பிட்டு மொத்தமாக நிறுத்தியுள்ளது ரஷ்யா. இதனால் ஜேர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் எரிவாயு சேமிப்பில் களமிறங்கியதுடன், அக்டோபர் மாதத்திற்கான இலக்கையும் எட்டியுள்ளனர். எனினும் பல ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு கட்டணம் மற்றும் எரிசக்தி கட்டணம் பல மடங்கு எகிறும் என்ற தகவல் பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஜேர்மனியில் பொதுமக்களுக்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் காரணிகளுக்காக 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரணத் தொகையை அறிவிக்க இருக்கின்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து எதிர்கொண்டு வரும் உக்ரைன், அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடனே இதுவரை தாக்குப்பிடித்து வருகின்றது. இருப்பினும் ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் கனரக ஆயுதங்களை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிடம் கோரி வருகின்றது. ஆனால் அதற்கான முடிவை இதுவரை எந்த நாடுகளும் அறிவிக்காததை அடுத்து, உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தற்போது புதிய நிபந்தனையை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “தற்போதைய சூழலில் ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும், அதை வழங்க ஐரோப்பிய நாடுகள் முன் வரவேண்டும்.  போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லாததால், நாட்டிற்கு போர் விமானங்கள் மற்றும் அதிக கவச வாகனங்கள் தேவைப்படுவதாக  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆயுதங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுக்கும் என்றால், எரிவாயு சிக்கலை தீர்க்க உக்ரைன் உதவ முடியும். ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியாகும் எரிவாயுவின் மிகப்பெரும் பகுதியை தங்களால் வழங்க முடியும் என்றும் தங்களின் சேமிப்புக் கிடங்குகளில் தற்போது 30 பில்லியன் கன மீற்றர் அளவுக்கு எரிவாயு சேமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருபகுதியை ஐரோப்பிய நண்பர்களுக்கு வழங்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ரஷ்யாவின் மிரட்டலும் அதட்டலுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சுவாதாக இல்லை எனவும், உக்ரைனுக்கான ஆதரவு தொடரும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |