மாட்டு கொட்டகையில் இருந்த மின்வேலி சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள குப்பநாயக்கனூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், எஸ்வந்த் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொட்டைகயில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் தியாகராஜன் கொட்டகையை சுற்றிலும் மின்வேலி அமைத்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் கொட்டைகையில் உள்ள மின்வேலிகளை துண்டிக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்வேலி தியாகராஜன் கால் மீது பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த சேர்ந்தமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாகராஜனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.