திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் னர் விவசாயிகள் அனைவரும் தங்கள் கையில் எலிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் விளைநிலங்களில் மணிலா பயிரிட்டுள்ளனர். அந்த வயல்களில் எலித்தொல்லை மிக அதிகமாக இருப்பதால், மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இந்நிலையில் பல சங்கங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் எலிகளைப் பிடித்து கொண்டு கோஷம் எழுப்பினர். அந்தப் போராட்டத்தில், “மணிலா பயிர்களை சேதம் செய்யும் எலிகளை அழிப்பதற்கு வேளாண்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு சோலார் வேலி அமைப்பதற்கு மானியம் வழங்க உதவ வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக அதிக அளவு மழை பெய்யாததால் மணிலா உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.அதனால் வேளாண்துறை அதிகாரிகள் மணிலா பயிர் அறுவடை சோதனை செய்து மகசூல் கணக்கிட்டு அதற்கான இன்சூரன்ஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வயல்வெளிகளில் எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும்”என்று பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எழுப்பியுள்ளனர். அந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் புருஷோத்தமன், சிவா, சரவணன், சிவராமன், கோவிந்தசாமி மற்றும் மனோகர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.