மதுரை மாவட்டத்தில் எலி மருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு சாப்பிட கொடுத்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள மேலூர் அருகே உள்ள கோவில் பட்டியில் 27 வயதுடைய சத்திய பிரபு என்பவர் தனது மனைவி நிவேதா என்பவருடன் வசித்து வருகிறார். வேறுபட்ட சமூகத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டதால் கோபமடைந்த நிவேதா தனது குழந்தையை கணவரிடம் விட்டுவிட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் குழந்தை எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறி சத்ய பிரபு ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார்.
அதன் பிறகு குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து எலி மருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு கொடுத்ததாக கூறி கணவர் சத்ய பிரபு மற்றும் கணவரின் உறவினர்கள் மீது நிவேதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சத்ய பிரபு, வசந்தியின் மற்றும் கருப்பையா ஆகிய 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.