கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூரில் எல்கேஜி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது அவரின் உடம்பில் ரத்தம் கட்டியது போல காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளதாகவும், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலை யின் காரணமாக இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. பள்ளியில் 100-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் சிறுமியிடம் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பஸ் டிரைவர்கள், பஸ் உதவியாளர்கள் என அனைவரையும் வரவழைத்து அடையாளம் காணும்படி தெரிவிக்கப்பட்டது. சிறுமி ஒருவரை அடையாளம் காண்பித்து அவரை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், பேருந்தின் உதவியாளர் என்பதும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.