புதுச்சேரியில் எல்கேஜி சிறுமிக்கு ஆசிரியர் எர்லம் பெரேரா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், கலிதீர்த்தல்குப்பம் மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் எர்லம் பெரேரா என்பவர் எல்கேஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திருபுவனம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர்களின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும், மருத்துவ ஆதாரங்களும் சரியாக இல்லை என்று கூறி ஆசிரியரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து திருபுவனை போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி வேல்முருகன் விசாரணை செய்து வந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது எனவும், ஆசிரியர் தவறு செய்ததற்கான சரியான ஆதாரங்கள் உள்ளது என்று கூறிய நீதிபதி அவரின் விடுதலை உத்தரவை ரத்து செய்து 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் வழக்கின் புலன் விசாரணையில் உள்ள குறைகளால் குற்றவாளிகள் தப்பித்து மிகுந்த வேதனையை தருகிறது. இதுபோன்ற வழக்குகளில் குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை தேட வேண்டுமென்று கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.