கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 8வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, “திமுக அரசானது தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
மேலும் இதற்கு அவர்கள் பொய்யான காரணங்களை கூறி பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த உடனே ரத்து செய்து விடுவோம் எனக் கூறிய அவர்கள் தற்போது அதற்கு தீர்மானம் இட்டு அனுப்புகிறார்கள். திமுக அரசால் கொரானோ காலத்தில் நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கிவிட்டு, அதன்பின்னர் நான்காயிரம் ரூபாயை மின் கட்டணமாக வசூலித்தார்கள்.
திமுக அரசானது, யாருக்கும் பயன்படாத வண்ணம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சி செய்து வருகிறது. மேலும் மின்சார தடைக்கு பாம்பு, அணில் கதை கூறி மக்களை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.