நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை அடுத்து 3வது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாகவும், அதை எடிட் செய்து பார்த்த இயக்குனர் வினோத் ஒருசில காட்சிகளை மட்டும் பேட்ச் ஒர்க் செய்வதற்காக மீண்டும் எடுப்பதற்கு திட்டமிட்டாராம்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை, அண்ணாசாலையில் இதன் பேட்ச் வொர்க் காட்சிகளை வினோத் படமாக்கி இருக்கிறார். இந்நிலையில் அங்கிருந்த ஒரு தீயணைப்பு வண்டியிலிருந்து அஜித் மாஸ்க் அணிந்தபடி குதித்து தன் சக வீரர்களுடன் நடந்து செல்வது போன்று காட்சியை படமாக்கி இருக்கிறார். இத்தகவல் அறிந்து அஜித்தை பார்ப்பதற்காக அங்கே கூட்டம் கூடியது. எனினும் கடைசி வரை அஜித் தன் மாஸ்க்கை கழட்டவில்லை.
இந்த நிலையில் அதற்கு மறுநாள் திங்கள்கிழமை அஜித் வெளிநாட்டிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதனால் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நபர் அஜித் இல்லை என அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பேட்ச்வொர்க் என்பதால் அஜித்திற்கு பதிலாக அவரைப் போன்ற தோற்றம் கொண்ட டூப்பை வைத்துதான் இயக்குனர் வினோத் படமாக்கியுள்ளார் என்பதும் இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது.