தேனியில் இருக்கும் கண்ணகி கோவிலை சீரமைக்க கோரி கலெக்டரிடம் கோவில் நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் இருக்கும் வனப்பகுதியில் கண்ணகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சித்திரை முழு பவுர்ணமி விழா அக்கோவிலில் நடைபெற உள்ளது. ஆனால் கோவில் பராமரிப்பின்றி செடிகளும் கொடிகளும் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது.
எனவே கோவில் நிர்வாக அதிகாரிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அதாவது கோவிலிலிருக்கும் செடிகொடிகளை அப்புறப்படுத்தி ஆகம விதிகளின்படி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட வேண்டும். மேலும் சித்திரை முழு பவுர்ணமி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சகல வசதிகளையும் செய்ய சுற்றுலாத்துறை மூலம் நிதி ஒதுக்குமாறு குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கோவிலில் ஆண்டுக்கு 24 பூஜைகள் அம்மனுக்கு நடைபெற வேண்டும் என்றெல்லாம் அந்த மனுவில் கோவில் நிர்வாகம் சார்பாக குறிப்பிடபட்டுள்ளது.