திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனியில் குழாயில் இருந்து அதிக அளவு குடிநீர் வீணாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அண்ணா காலனி அருகே அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து சுமார் அரை மணி நேரமாக குடிநீர் வீணாக வெளியேறியதால் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் குழாயிலிருந்து தண்ணீர் வீணாக வெளிவருகிறதே என்று புலம்பியபடி சென்றனர்.
மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, மாதம் ஒருமுறை காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும். அதன்படி நேற்று முன்தினம் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது தண்ணீரை திறந்து விட்டு அதற்குள் இருந்த சேகரமான கசடுகள் அகற்றப்பட்டன. அதன்பின் குளோரினேசன் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. மேலும் அந்த குழாயில் உடைப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.