ரஷிய படைகளிடமிருந்து தங்களது பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்கிரைன் இறங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்து வருவதுடன் பெரும்பாலான பொருட்களையும் கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் பொது மக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அந்த நகரத்தில் சுமார் 3 லட்சம் மக்கள் வசிப்பதாக கருதப்படும் நிலையில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது உக்ரைனின் நாச வேலை என ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரஷிய படையினர் 1.5 கிலோமீட்டர் மின் இணைப்பு கம்பிகளை அகற்றி விட்டதாகவும், உக்ரைன் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த கம்பியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.