மகாராஷ்டிரா புனேவிலுள்ள சார்ஹோலி பகுதியில் வசித்து வரும் 65 வயதான கெர்பா தோர்வ் என்ற முதியவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப்போய் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து உள்ளார். அதற்காக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அவர் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, கெர்பா தான் இறந்து போனதாக நாடகமாட கொலை செய்து உள்ளார். தன்னுடன் நட்பாக பழகி வந்த ரவீந்திர பீமாஜி கெனந்த்(48) என்பவரை, தனது தோட்டத்தில் வைத்து கழுத்தை அறுத்தை கொலை செய்துள்ளார்.
இதையடுத்து ரவீந்திர பீமாஜி கெனந்த்தின் தலையை தனியாக துண்டித்துவிட்டு சடலத்துக்கு அவரது உடையை அணிவித்துள்ளார். அதன்பின் தலை இல்லாத அந்த உடலை ரோடு ரோலரை வைத்து மோதி, அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து உள்ளார். இதற்கிடையில் இந்த உடலை பார்த்த கெர்பாவின் உறவினர்கள், அவர்தான் இறந்து விட்டார் என நம்பிவிட்டனர். அதே நேரம் முதியவர் கெர்பா ஊரை விட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் சென்ற 16-ம் தேதி அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் தந்தையை காணவில்லை என ரவீந்திர பீமாஜி கெனந்த்தின் மகன் நிகில் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இறந்தது முதியவர் இல்லை என்பதை உறுதிசெய்த காவல்துறையினர் , கெர்பாவை தேடி வந்தனர். அதன்பின் புனே அருகில் கெர்பாவை காவல்துறையினர் கைது செய்தனர். இதுபற்றி அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மொத்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வாறு காதலுக்காக முதியவர் கொலை செய்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.