தமிழகத்தில் 27 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு பல்வேறு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சென்னையில் மட்டும் மந்தமாகவே நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க வெற்றி பெறும் என நினைத்த இடங்கள் அவர்களை கைவிட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பா.ஜ.க.வின் முக்கிய நபரான உமா ஆனந்தன் சென்னையில் 144 வது வார்டில் போட்டியிட்ட நிலையில் வெறும் எட்டு வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அனந்தபுரம் பேரூராட்சியில் 6வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நிரோஷா ஒரு வாக்குகள் கூட பெறாமல் தோல்வியை சந்தித்தார். மேலும் பவானிசாகர் தொகுதியில் 16 வது வார்டில் போட்டியிட்ட நரேந்திரன் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். இது போல தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பாஜக 10 ஓட்டு கூட வாங்காதது கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.