ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து 199 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை விளாசி 49 ரன்னில் அவுட் ஆனார். தொடக்க வீரர்களில் இஷான் கிஷன் 3 ரன்னுடனும், கேப்டன் ரோகித் 28 ரன்னுடனும் (17 பந்துகள், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்து வெளியேறினர்.
திலக் வர்மா 36 ரன்னும், பொலார்டு 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து உதான்கட், சூர்யகுமார் யாதவ் இருவரும் களமிறங்கிய போது 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சூர்யகுமார் யாதவ் 43(30) ஆட்டமிழந்து அணிக்கு ஷாக் கொடுத்தார். அடுத்ததாக உனத்கட் 12 ரன்னில் அவுட்டானார். இறுதியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் 3வது வெற்றி இதுவாகும். மும்பை அணி தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது.