கடந்த 10ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த குறையும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்க கூடியது மக்களுடைய மனநிலையைப் பொருத்தது. ஏற்கனவே நான் கூறி இருக்கின்றேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்தார். தொண்டர்கள் இயக்கமாக தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். தொண்டர்கள் இயக்கமாக இன்றைக்கு வளர்ந்துள்ளது.
இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பில் கழகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சசிகலாவை சேர்ப்பது குறித்து ஏற்கனவே நான் பேட்டியில் சொல்லியிருக்கிறேன், தலைமை கழகத்தினுடைய நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றினார்கள் என்பதனை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
இன்றைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் மாண்புமிகு அம்மாவின் உடைய ஒவ்வவொரு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் தாலிக்கு தங்கம், அம்மா உணவகங்கள், அம்மா மினி கிளினிக் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பொறுப்பேற்று இருக்கின்ற திமுக அரசு எதையும் நிறுத்தாமல் மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை முறையாக,
முறைப்படி கால நேரத்திற்குள் அளிக்க வேண்டும் என்பதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிலைப்பாடு. ஏற்கனவே நிறுத்தி வைத்திவைக்கப்பட்டிருந்த சப்பாத்தியை ஐந்து தினங்களுக்கு முன்பாக நான் அறிக்கையின் மூலமாக விரிவாக அறிக்கை அளித்து அதை மீண்டும் தொடர வேண்டும் என்பது கோரிக்கை வைத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், திமுக ரொம்ப அவசரப் படுகிறார்கள். கடந்த காலங்களில் 10 ஆண்டுகாலம் மாண்புமிகு அம்மாவுடைய காலத்திலும், அம்மாவுடைய ஆட்சி நடைபெற்று காலத்திலும் அரசு எந்த முறையில் செயலாற்றி உள்ளது என்று உங்களுக்கு அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையாக நிலைநிறுத்தப்பட்டு, தமிழகம் அமைதிப் பூங்கா மாநிலமாக இருந்தது.
தமிழகம் அத்தனை துறைகளிலும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருந்தது. கொரோனா காலத்தில் மட்டும் பின்னடைவில் இருந்தது. அதை மீண்டும் மீட்டு எடுக்க ஒரு சூழ்நிலை உருவானது. விவசாயத்தை எடுத்துக்கொண்டாலும், தொழில்வளர்ச்சியை எடுத்துக்கொண்டாலும் மக்களுக்கு சேர வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் சமூகநீதி பாதுகாப்பு திட்டங்கள் எந்த திட்டமாக இருந்தாலும் மக்களுக்கு முறையாக சென்று கொண்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்தார்கள் இதில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என தெரிவித்தார்.