எல்லா ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
எல்லா ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன் வழங்கப்பட வேண்டியது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமை என ஒரிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அந்த உயர்நிலைப்பள்ளி அரசு ஆதரவு இல்லாத பள்ளியாக செயல்பட்டு வந்தது. 1994ஆம் ஆண்டு முதல் அந்தப் பள்ளியை ஒரிசா அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. எனவே மனுதாரரான தலைமையாசிரியர் அரசு ஊழியராக பணி ஓய்வு பெற்றுள்ளார்.
ஆனால் பணி ஓய்வுக்குப் பின் பென்சன் வழங்குவதில் தனக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நிர்வாக சிக்கல் காரணமாக தனக்கு பென்சன் வழங்கப்படாமல் 74 வயதிலும் தன்னை அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பளம், பென்ஷன் வழங்குவது ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கான உரிமை என ஒடிஷா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மனுதாரர் அரசு ஊழியராகவே தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த காரணத்தினால் அவருக்கு பென்சன் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஊழியர் தரப்பில் தவறு இல்லாமல் அவர் வேலை செய்த நிறுவனம் அல்லது அரசின் தவறு காரணமாக ஊழியர்களை வருந்துவதற்கு அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது. மேலும் உரிய கடைசி தேதிக்குள் பென்சன் வழங்கப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.