கர்ணன் படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஒழிப்பு போராட்டத்தில் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, தான் அனுபவித்து இருக்கின்ற வேதனையை இன்னொருவருக்கு கடத்துவது இல்லை, பேசி இருக்கிறோம், எழுதி இருக்கிறோம். ஆனால் மற்றவர்களை உணரவைத்தோமா என்பது இல்லை, அதான் உண்மை. ஆனால் இந்த படம் இரண்டே கால் மணி நேரத்தில்…
இவ்வளவு பெரிய தாக்கத்தை, ஒரு வலியை கடத்தி விடுகிறது என்பது படைப்பாளியாக என் தம்பி மாரி செல்வராஜ் அவர்களுக்கு தான் பாராட்டு. இந்த கதையை கேட்டவுடன் யாருமே தயாரிக்க பயப்படுவார்கள். இது எதுக்கு பிரச்சனையாக இருக்கிறது ? எடுத்து எப்படி சந்தைப்படுத்துவது ? எப்படி கொண்டு போவது என்று ? அதைப்பற்றி கவலைப்படாமல் எடுத்ததற்கு முழுப் பெருமையும் வெற்றியும்.சாதிய இழிவை துடைத்து எறிய போராடாமல் இருப்பதை விட செத்து மடிவதே மேல் என்கிறார் அண்ணன் அம்பேத்கர்.
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்று விஷமாகும் என்கிறார் நம்முடைய கவிஞர் பழனிபாரதி. இந்த புரையோடிப்போன இந்த சாதியை புற்றுக்கு…. அந்த புற்றை இடித்து தள்ளும் ஒரு கடப்பாரை யாக தான் நான் இந்த படத்தைப் பார்க்கிறேன். எல்லோரும் வந்து இந்த படத்தை வந்து பார்க்கவேண்டும் என்று ஒரு ரசிகர்களை அழைப்பது போல் இல்லை. ஒவ்வொருவரின் கடமை இந்த படத்தை நாம் கொண்டாட வேண்டும். இந்த படைப்பை நாம் பாதுகாக்க வேண்டும். இது ஒரு ஆவணமாக நான் நினைக்கிறேன்.
தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள், இது ஒரு பொழுதுபோக்கு படம் என்று பார்க்காமல், நமது சமூகத்தில் எவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன்…. எவன் எல்லாம் தன்னை தவிர மற்றவன் தாழ்ந்த சாதி என்று நினைக்கிறானோ அந்த எண்ணம் உடையவன் தான் தாழ்ந்த சாதியாக இருக்க முடியும். இன்றைக்கு அதுதான் எதார்த்த உண்மை. அப்பொழுது அதை வந்து ஒவ்வொருவரும் பார்த்து, மாரி செல்வராஜின் அந்த வலியை நம்மிடம் கடத்தி இருக்கிறார். அதை நீங்கள் உணர்ந்து விட்டால், அந்த படைப்பாளிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகும் என சீமான் கூறினார்.