நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழகம் முழுவதும் இருந்து எங்களுக்கு வருகின்ற தகவல்கள் 200 தொகுதிகளுக்கு மேல் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்கிற செய்திதான் வந்து கொண்டு இருக்கிறது. அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிய ஜனதா – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பணபலம், அதிகார பலத்தை மீறி மக்கள் பலம் வெற்றி பெறுகிறது.
அரசாங்கத்தினுடைய தடைகளை தகர்த்து எறிந்து வெற்றியின் சிகரத்தை நாங்கள் அடைகிறோம் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வேளச்சேரி தொகுதியில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்கின்ற காட்சியை நாம் பார்த்தோம். இதில் பல கேள்விகள் தொக்கி இருக்கின்றன. தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கும் பொழுது அந்த வாக்கு பெட்டிகளை எப்படி ஒரு தொழிலாளி எடுத்து செல்ல முடியும். அந்த நேரத்தில் எடுத்து செல்ல வேண்டியதனுடைய அவசியம் என்ன? தேர்தல் முடிந்த பிறகு அதை எடுத்து சென்றிருக்கலாம்.
அடுத்ததாக அது பயன்படுத்தப்படாத வாக்குப்பெட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அதனுள் 15 ,20 வாக்குகள் அதில் இருக்கின்றன என்கிற தகவல் வருகிறது. எனவே இதுபோன்ற ஒரு குழப்பத்திற்கு தேர்தல் ஆணையம் ஏன் அனுமதி அளித்தது ? ஏன் அதைப் போன்ற குழப்பங்கள் நிகழ்கின்றன ? தேர்தல் ஆணையரிடம் இருந்து தெளிவான விளக்கம் வரவில்லை.
சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த பகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்பது போன்ற பதில்கள்தான் வருகின்றன ஒழிய, தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கும்பொழுது ,பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத எந்த வாக்கு பெட்டியையும் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன ? அதற்கான அதிகாரத்தை யார் வழங்கினார்கள் ?
இவைகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் ஒரு தெளிவான பதிலை சொல்லவில்லை என்று சொன்னால், ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள்.அந்த நம்பிக்கை இழப்பு என்பது இன்னும் அதிகமாகி விடும் என்பதை நான் எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார்.