இந்தியாவில், அவசரகால பயன்பாட்டுக்கு முதன்முதலாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும், ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாரத் பயோடெக், சீரம் நிறுவனம், பைசர் மற்றும் பயோ என்டெக் ஆகிய 3 நிறுவனங்கள், தங்களுடைய தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் தயாரித்து வழங்குகிற கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகளை, அண்மையில் சீரம் நிறுவனம் வழங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு முதன்முதலாக இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.