திண்டுக்கலில் ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 13 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் தற்போது வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். பிரியங்கா உதவி செயற்பொறியாளராக நெடுஞ்சாலை துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி பாப்பாத்தி, கோபாலகிருஷ்ணன், பிரியங்கா ஆகியோர் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். அதன்பின் பாப்பாத்தி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு நிலையில் இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து திண்டுக்கல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.