அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பெருமாள் காலனியில் அரசு ஊழியரான ராஜமுருகபாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நிக்சன் என்பவர் தலைமைச் செயலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நிக்சன் தனக்கு நன்கு தெரிந்த மங்களபுரம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அதிகாரிகளை வைத்து அரசு வேலை வாங்கி தர முடியும் என நம்பிக்கை கொடுத்தார். அதனை நம்பி எனக்கு தெரிந்த 5 நபர்களிடமிருந்து 14 லட்ச ரூபாய் வரை வாங்கி நிக்சனிடம் கொடுத்தேன்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வேலை வாங்கி கொடுக்காமல் நிக்சன் பணத்தை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜமுருகபாபு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நிக்சன் பணத்தை மோசடி செய்தது உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் நிக்சனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.