மகளை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கபிலன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சென்ற 9-ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தூரிகை, பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது.
இந்தநிலையில் மகளை பறி கொடுத்துவிட்டு தவிக்கும் வலிகளை வார்த்தையாக வடிவமைத்துள்ளார் கபிலன். அவர் கூறியுள்ளதாவது,
எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால்நான் எப்படித் தூங்குவேன்…!
எங்கே போனாள் என்று தெரியவில்லை. அவள் காலணி மட்டும் என் வாசலில்..!
மின் விசிறி காற்று வாங்குவதற்கா… உயிரை வாங்குவதற்கா..?
அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்…?
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்குத் தெரியாது அவளே என் கடவுள்…!
குழந்தையாக அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது. கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா கண்களின் வலி.
யாரிடம் பேசுவது எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பியிருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு.
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்துவிட்டான்..!