பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில் பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் பகுதியில் நேற்று ஆப்கானிஸ்தான் படையினர் திடீரென பீரங்கியால் குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பதில் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற இந்த மோதலில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததால் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் எல்லை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.