பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இன்று லடாக் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு சென்றார். அவருடன் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதியும் சென்றனர். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்தினருடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், இந்த பயணத்தை ராஜ்நாத் சிங் மேற்கொண்டுள்ளார். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள ராணுவ தளவாடங்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் முன்னிலையில் ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாதுகாப்பு துறை, 130 கோடி இந்திய மக்களின் பாதுகாப்பு அரணாக நீங்கள் நிற்கிறீர்கள். 20 வீரர்கள் தியாகம் வீண் போகாது. ராணுவ வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது.தேசத்தின் பெருமையை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள். இதுவரை பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் என்னவாக இருந்தாலும் இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். எவ்வளவு தூரம் தீர்க்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது.
இந்தியாவில் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. எல்லையில் வீரர்கள் நமது நாட்டின் எல்லையை மட்டும் பாதுகாக்கவில்லை. நமது இந்தியர்களின் மானத்தையும் காப்பாற்றியுள்ளீர்கள்.நம் நாட்டில் ஒரு பிடி மண்ணை கூட யாராலும் எடுத்துச்செல்ல முடியாது. உலகம் முழுவதும் சமாதான செய்தியை வழங்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே.
நாம் ஒருபோதும் எந்த நாட்டின் மீது படை எடுத்தது இல்லை. எந்த நாட்டின் நிலத்தையும் ஆக்கிரமித்தது இல்லை என்று அமைச்சர் கூறினார்.